போகர் பேசுகிறார்

பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர் மகரிஷி பற்றி, நான் ஆராய்ந்து தெரிந்து கொண்ட சில ரகசிய உண்மைகளை பற்றி, இங்கு முருகபெருமான் அருளால் தெரிவிக்கிறேன்.

சில நூற்றண்டுகளுக்கு முன்னால்,வாழ்ந்த மகான்கள்,சித்தர்களின் பிறப்பு,இறப்பு  அவர்களின் வாழ்வின் இறுதி காலம் போன்றவைகளையே, நம்மால் சரியாக தீர்மானமாக அறிய  முடிவதில்லை.காரணம் இது போன்ற தவசீலர்கள்,நம்மை போன்ற, கீழ்நிலையில் உள்ள மானிடர்களுக்கு,வாழ்க்கையின் நெறி முறைகளையும், இறைகோட்பாடுகளையும்,தாங்கள் யோகசக்தியின் மூலம் ஆய்ந்தறிந்த, ஞான யோக மருத்துவ உண்மைகளையும், சித்தர் பாடல்கள் மூலமாக எடுத்து கூறி,நம்மை கடைந்தேற செய்வதையே, முதன்மைப் பணியாகக் கொண்டு வாழ்கின்றனர்.

 சித்தர் பெருமக்கள் ஒருபோதும் தாங்கள் சுயபுராணத்தை தம்பட்டம் அடித்து கொள்வதில்லை.

ஆனால் சித்தர்களின் பெயரை பயன்படுத்திக் கொண்டு, பெயரும் புகழும் பணமும் சேர்க்க துடிக்கும் ஒரு போலி கூட்டம், இந்தியாவிலே முதல் முறையாக,உலகிலே முதல் முறையாக என்று, சித்தர்களை வியாபாரப் பொருளாக்கி கொண்டிருக்கிறது.

எனவே சித்தர்களின் வாழ்க்கை வரலாறுகளை,சித்தர் பாடல்களின் மூலமாகவும்,செவிவழி செய்திகளின்,வாயிலாகவும் மட்டுமே,ஒருவாறாக ஊகம் செய்து கொள்ள வேண்டியதாக உள்ளது.

இது போல் தான் பழனியில் ஜீவ சமாதி கொண்டு,பல்லாயிரக்கணக்கான, மக்களின் துயரங்களை சூட்சம நிலையில் இருந்து, தீர்த்து கொண்டிருக்கும்,போகர் சித்தரை பற்றியும், பல்வேறு விதமான கற்பனை செய்திகளும்,அவ்வப்போது வந்து கொண்டிருகின்றன.

இந்த செய்திகளில் சில உண்மையாகவும்,சில தவறானதாகவும் இருக்கின்றன. போகர் சித்தரை பற்றி நாம் அறிந்த வரை,சிலர் போகர் இந்தியாவை சேர்ந்தவர் என்றும்,சிலர் சீனாவை சேர்ந்தவர் என்றும் கூறுகின்றனர். மேலும் போகர் ஆகாயவிமானம் தயார் செய்து,அதில் சிலரை ஏற்றிக்கொண்டு, சீனா,மக்கா,மதினா போன்ற நாடுகளுக்கு, போய் வந்தவர் என்று சொல்லபடுகிறது,குறிப்பாகப் பழனி மலைமேல், வீற்றிருக்கும் நவபாஷாண தண்டாயுதபாணி,முருகன் சிலை போகரால் செய்யப்பட்டது. இது பற்றியும் சர்ச்சைகளும் உள்ளது.

உண்மையில் போகர் சித்தர் யார்.அவருடைய பிறப்பு,மற்றும் அவருடைய ஆன்மிக வாழ்வு, அவர் பழனியில் ஜீவசமாதி அடைந்த விதம் போன்றவைகளை பார்க்கலாம்.

இன்றைக்கு சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இந்த பூமியில் அவதரித்தவர் போகர். இவரின் தந்தை ஒரு முழு தமிழர்.இவர் வணிக தொழிலில் ஈடுபட்டு, கடல் கடந்து பல நாடுகளுக்கு சென்று வருபவர்.

 அப்படி வணிகத்திற்காக சீனா சென்ற போது,தான் சந்தித்து பழகிய, சீனா நாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் தான் அய்யன் போகர்.தம்முடைய பத்து வயது வரை சீனா நாட்டில் வளந்த போகர்,பத்து வயது முடிந்த பின் தன் பெற்றோருடன் தமிழ் மண்ணிற்க்கு வந்து சேர்ந்தார்.

அதன் பிறகு தன்னுடைய 25 வயது நடக்கும் போது, நண்பர்கள் சிலருடன் வணிக கப்பல் ஒன்றின் மூலம் தாம் பிறந்த மண்ணான சீன நாட்டிற்க்கு சென்று வந்தார். தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு சில ஆண்டுகள் மட்டுமே கல்வி கற்றதாகவும், பின்பு ஏட்டு படிப்பினால் பயன் ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து,வாழ்க்கை கடலில் கரை சேர,ஞான கல்வி ஒன்றே தேவை என்று உணர்ந்து,அதற்கான ஆன்மிக தேடலில் இறங்கி உள்ளார்.

இயல்பாகவே இறை பக்திமிக்கவரான தந்தையும், சீனா நாட்டில் பிறந்து வளர்ந்த பெண்ணாக இருந்தாலும்,மண வாழ்விவில் ஈடுபட, தொடங்கிய பின்னர்,தன் கணவர் வழி நின்று,அவரோடு இணைந்து இறை வழிபாட்டில்,ஈடுபாடு கொண்ட தாயாரும்,போகரின் ஆன்மிக வாழ்விற்கு அடிதளமாக இருந்தனார்.

அப்பொழுது பழனியில் நிறைந்து வாழ்ந்த,சித்தர்கள்,யோகிகளின் நட்பு ஏற்பட்டு, போகர் சுவாமிகளும் சித்த மார்க்கத்திலே ஈடுபட துவங்கினார். பெரும்பாலும் பழனிமலையில்,மேலுள்ள குகையிலும்,சில நேரங்களில் பழனிமலையை, சுற்றி இருக்கும் மலைகளிலும் தவயோகத்தில் ஈடுபட்டு வரலானார்.

முற்பிறவிகளில் செய்த தவபலனோடு,இப்பிறவியில் செய்த தவ பலனும் சித்திக்க, சித்தருக்கு எல்லாம் மகா சித்தர் ஆனார். முருகக்கடவுளின் மேல் அதிகமான பக்தி கொண்டிருந்த போகர் சுவாமிகள், முருகனையே வழிபடும் கடவுளாக கொண்டிருந்தார். அதோடு சித்த மருத்துவம்,ரசவாதம்,நவபாஷண ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தேர்ந்தார். அகத்தியர் போகரே வேதியலின் தந்தை என்று புகழ்கிறார்.

தன் சொந்த உபயோகத்திற்காக ரசலிங்கம் செய்ததாகவும்,நவபாஷணங்களை சுத்தி செய்து தாம் வணங்கும் முருகபெருமானை நவபாஷணங்களில் செய்துள்ளார். இப்படி ஒன்பது நவபாஷண சிலைகளை செய்துள்ளர்.இவற்றில் ஒன்று தான்,நாம் பழனிமலை கோவிலில் வைத்து பூஜிக்கும் முருகன் சிலையாகும்.

மற்ற நவபாஷண சிலைகள் எல்லாம் மறைத்து வைக்கப்பட்டு,தேவகணங்களாலும்,போக மகரிஷியின் சீடர்களாலும் வணங்கி வரப்படுகிறது.கூடிய விரைவில் ஒவ்வொரு சிலைகள் கண்டுபிடிக்கபட்டு,மக்களால் வழிபட கூடிய காலம் விரைவில் வரும்.

போகர் சுவாமிகள் பழனிமலை மேல் தவத்தில் ஈடுபட்டு வந்த காலத்தில், மலை மேல் கோவில் எதுவும் இருக்கக்கவில்லை.மலை அடிவாரத்தில் இருக்கும் முருகன் கோவில் மட்டுமே இருந்துள்ளது.

தமது எழுபது வயது வரை மருத்துவத்திலும்,நவபாஷண ஆய்வுகளிலும், தாம் அறிந்தவற்றை ஓலை சுவடிகளில்,பாடல்களாக எழுதி வருவதிலும் கழித்த போகர் சுவாமிகள், எழுபது வயது துவங்கியதும் மற்ற இடங்களுக்கு எங்கும் செல்லாமல் பழனி மலை மேல் உள்ள குகையில் அமர்ந்து கடும் தவத்தில் ஈடுபடலானார்.

இவ்வாறு பத்தாண்டுகள் இருந்து,பின்னர் அவ்விடத்திலே ஜீவ சமாதி அடைந்தார். அந்த குகை தான் பலகை கல்லால் மூடப்பட்டு,அதன் மேல் மரகத லிங்கம் வைத்து பூஜிக்கப்படுகிறது. போகர் மகரிஷி ஜீவ சமாதி அடைந்த பிறகே,அவரால் வழிபடப்பட்டு வந்த,நவபாஷண தண்டாயுதபாணி சிலை வடிவத்திற்கு,கோவில் கட்டப்பட்டது.

இன்றும் போகர் மகரிஷி பலருக்கு சூட்சும நிலையில் உதவி கொண்டு தான் இருக்கிறார்.சித்தமார்க்கத்தில் இருக்கும் தகுதியானவர்களுக்கு அவரின் சூக்கும தரிசனமும் கிடைக்கிறது.

அப்படி போகரின் அருள் பெற்ற ஒருவர் தெரிவித்த தகவல்களே மேலுள்ளவையாகும். நாம் அனைவரும் பழனியில் ஜீவ சமாதியில் இருக்கும் போகரையும்,உலக நன்மைகளுக்காக, அவரால்   பிரதிஷ்டை  செய்யபட்டுள்ள,நவபாஷண   தண்டாயுதபாணியையும்,  தரிசித்து கர்மவினைகள் நீங்கி நலமோடு வாழ்வோம்.

ஓம் சரவணபவனே சரணம்

ஓம் போகர் திருவடியே சரணம்